[ Solar Scam ] சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை !!

[ Solar Scam ]

சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை


கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அம்மாநில அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவின் முக்கிய அரசியல் புள்ளிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி பரபரப்பை ஏற்படுத்திய சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் சோலார் பேனல் அமைத்து கொடுப்பதாக கூறி தன்னிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 2012ஆம் ஆண்டு அப்துல் மஜீத் என்பவர் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய கோழிக்கோடு காவல்துறை இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக பிஜு ராதாகிருஷ்ணன், இரண்டாவது குற்றவாளியாக சரிதா நாயரை சேர்த்தது. இவ்வழக்கு 2018 ஆம் ஆண்டு முதல் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிந்து கடந்த பிப்ரவரி மாதமே தீர்ப்பு வெளியாக வேண்டிய நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

கோழிக்கோடு நீதிமன்றம் பலமுறை சரிதா நாயருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Solar-scam

இதையடுத்து கோழிக்கோடு நீதிமன்றம் சோலார் பேனல் வழக்கில் இன்று தீர்ப்பளித்தது . அந்த தீர்ப்பில் சோலார் பேனல் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் மீதான தண்டனை விவரங்களை நீதிமன்றம் அறிவிக்கவில்லை. மேலும் மூன்றாவது குற்றவாளியான மணி மோகன் என்பவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News  |   Solar Scam |  Saritha Nair

Leave a Reply

%d bloggers like this: