[ KV Anand ] அயன், கோ படங்களின் இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார் !! -03

[ KV Anand ]

அயன், கோ படங்களின் இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்


பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் வயது 54 திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இன்று மரணமடைந்தார்.

மாற்றான் காப்பான் அயன் கோ போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் கே வி ஆனந்த். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் 90களில் கேமராமேனாக திரைத்துறையில் தனது பயணத்தை துவக்கினார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன் உட்பட பல வெற்றி படங்களில் பணியாற்றினார்.

பின்னர் 1994ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான தேன்மாவின் கொம்பத் என்னும் படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகனார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கே.வி ஆனந்திற்கு கிடைத்தது.

பிறகு 1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தில் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அப்படம் நல்ல வரவேற்பை பெறவே அதைத்தொடர்ந்து சூர்யாவின் நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி உட்பட பல வெள்ளி விழா கொண்டாடிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

2005ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் கே.வி.ஆனந்த் இயக்குநராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் அவர் இயக்கிய ‘அயன்’ படம் மெகா ஹிட் ஆனது. தொடர்ந்து 2011ஆம் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தின் வெற்றி கே.வி.ஆனந்தை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக முன்னிறுத்தியது. கடைசியாக 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த ‘காப்பான்’ படத்தை கே.வி ஆனந்த் இயக்கியிருந்தார்.

KV-anand

KV Anand

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி ஆனந்த் மாரடைப்பால் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளன. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கின் மறைவு ஏற்படுத்திய சோகமே தமிழ் திரையுலகில் இன்னும் மறையாத நிலையில் தற்போது கே.வி ஆனந்தின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Star Tamil News   |     KV Anand

Leave a Reply

%d bloggers like this: